

நிலுவை வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய லோக்-அதாலத் ஏப்.10, ஜூலை 10, செப்.11,டிச.11 ஆகிய 4 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டின் கடைசி லோக்-அதாலத் நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும்மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரான மூத்த நீதிபதி எம்.துரைசாமி ஆகியோரது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லோக்-அதாலத் நேற்று நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக்-அதாலத்தை மூத்தநீதிபதி பரேஷ் உபாத்யா பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மலை சுப்ரமணியன், எம்.தணிகாச்சலம், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோரது தலைமையிலும, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர். தாரணி, ஓய்வு பெற்ற நீதிபதிகள்ஏ.ஆர்.ராமலிங்கம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோரது தலைமையிலும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதுபோல மாவட்ட, தாலுகா நீதிமன்றங்கள் என மொத்தம் 417 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 57 ஆயிரத்து 723 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டு, ரூ. 388.30 கோடி மதிப்பில் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டு பயனாளிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட லோக்-அதாலத்தை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் ஒருங்கிணைப்பில் மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.