

‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 1,353 போலீஸாருக்கு அவர்கள் விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் போலீஸாரின் நலன் காக்க மாவட்ட, மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு வருகின்றன. இதில், காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அளவில் தீர்க்கப்பட வேண்டிய பணிமாறுதல் தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்து 1,353 போலீஸாருக்கு அவர்கள் விருப்பப்படி பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 260 பேர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 149, கன்னியாகுமரிக்கு 99, கள்ளக்குறிச்சிக்கு 96, திருநெல்வேலி க்கு 86, நாமக்கல்லுக்கு 72, சிவகங்கை மாவட்டத்துக்கு68 பேர் அவர்களது விருப்பப்படி இடமாற்றம் பெற்றுள்ளனர். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைத்துள்ளதால் போலீஸார் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதிநடைபெற்ற வடக்கு மண்டல மாவட்டங்களுக்கான குறைதீர்வு மனு நாளில் 300 மனுக்களும், கடந்த 8-ம் தேதி சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நடந்த சென்னை மாநகர் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டத்தில் 760 மனுக்களும் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, வரும் 15-ம் தேதி காலை திருச்சியிலும், மாலை மதுரையிலும், 17-ம் தேதி கோவையிலும் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் காவலர் குறைதீர்வு நாள் மனுக்கள் பெறப்படுகின்றன.