

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோன்று, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களிலும் நேற்று விழா தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும். நடப்பாண்டுக்கான நிகழ்வு, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதமந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசகம் பாடிட மேள தாளம் முழங்கிட கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் கொடியேற்றினார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உள் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
20-ம் தேதி ஆருத்ரா தரிசனம்
திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் நடராஜர் - சிவகாமியம்மனுக்கு ஏக கால லட்சார்ச்சனை நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும்.
‘கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம், தேர் திருவிழா, தரிசன விழா ஆகியவற்றுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை’ என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை கொடியேற்றத்துக்கு வந்த பக்தர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனாலும், தீட்சிதர்கள் 4 சன்னதிகளிலும் கதவுகளை திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் திரளாக கோயிலுக்குள் வந்து, கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர். டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் 4 கோபுர வாசல்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உத்திரகோசமங்கை
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும், சந்தனம் களையப்பட்டு, 32 வகையான மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள் பாலிப்பார்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று கோயிலில் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஆருத்ரா தரிசன தினமான டிச.19-ல் காலை 8.30 மணி அளவில் மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டுஉள்ள சந்தன காப்பு களையப்படும்.
டிச.20-ல் அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதி உலா நடைபெறும். மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் அபிஷேகமும், இரவு மாணிக்கவாசகருக்கு காட்சி தந்த பின்னர் பஞ்சமூர்த்திகளுடன் மங்களநாத சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்.
ராமேசுவரம்
இதேபோன்று, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சையால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கும், சாமி சன்னதி பிரகாரத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கும் நேற்று காப்பு கட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோயிலில் தினமும் காலை, மாலை மாணிக்கவாசகர் தங்கக் கேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.20 அதிகாலை ஆருத்ரா தரிசன நடக்கும்.
திருவண்ணாமலையில் உற்சவம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபக் கொப்பரையில் இருந்த மை, நடராஜருக்கு சிவாச்சாரியார் மூலம் சாற்றப்படும். ஆருத்ரா தரிசன வழிபாட்டுக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தீப மை வழங்கப்படும்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகரின் 10 நாள் உற்சவம் நேற்று தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர், மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.