

ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேனை, மதத்தை காரணம் காட்டி தனிநபர் ஒருவர் அனுமதிக்க மறுத்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
பிரபல பரதநாட்டியக் கலைஞரும், வைணவ சொற்பொழிவாளருமான ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் கோயிலுக்குள் மாற்று மதத்தவர் செல்லக் கூடாது என தடுத்து வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜாகீர் உசேன் திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பிய புகார் : பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் நான் ஒரு வைணவராகவே வாழ்ந்து வருகிறேன். பல வைணவத் தலங்களுக்குச் சென்று திருப்பணிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், வழிபாடு நடத்தி உள்ளேன்.
இந்தநிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று (டிச.10) வழிபடச் சென்ற போது, ரங்கராஜ நரசிம்மன் என்பவர் என் மத அடையாளத்தை கொச்சைப்படுத்தி, தகாத சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, என்னை பிடித்து வெளியே தள்ளி விட்டார். கோயில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நான் மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு (டிச.10) சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.
இதுதொடர்பாக ரங்கராஜ நரசிம்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று சென்னையில் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, முதல்வரிடம் போதிய அறிவுரைகளையும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக எந்த விதிமீறல் இருந்தாலும், அதை முறைப்படி தான் அணுக வேண்டும். சட்டத்தை தனிப்பட்ட முறையில் நாமே கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து கூறியது: சம்பவத்தில் கோயில் ஊழியர்கள் யாரும் ஈடுபடவில்லை. விசாரணை குறித்த அறிக்கை, துறை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். ரங்கராஜ நரசிம்மனிடம் கேட்டபோது, ‘‘சட்டப்படியாக ஒரு தவறு நடக்கும்போது அதை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம். என் மீது புகார் அளிக்கப்பட்டால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.