

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறி விலை உச்சத்தில் உள்ளது. மொத்த விலையில் பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20-க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. தற்போது கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.50 ஆக விலை குறைந்துஉள்ளது.
கடந்த மாதம் தென் மாநிலங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் காய்கறி பயிர்கள் அழிந்தன. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து அவற்றின் விலை உயரத் தொடங்கியது. தக்காளி விலை வேகமாக உயர்ந்தது. மொத்த விலையில் கிலோ ரூ.110 வரை உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.160 வரை உயர்ந்தது. பண்ணை பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்கத் தொடங்கிய நிலையில் கோயம்பேடு சந்தையிலும், வெளிச் சந்தைகளிலும் தக்காளி விலை குறையத் தொடங்கியது. தற்போது கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.50 ஆக விலை குறைந்துள்ளது.
இதனிடையே கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை சத்தமில்லாயம் உயர்ந்து வருகிறது. அங்கு பெரும்பாலான காய்கறிகளின் விலை, மொத்த விலையில் கிலோ ரூ.20-க்குமேல் உயர்ந்துள்ளது. குறிப்பாகமுருங்கைக்காய் ரூ.150, வெண்டைக்காய் ரூ.70, கத்தரிக்காய், புடலங்காய், அவரைக்காய் தலா ரூ.60, கேரட் ரூ.50, நூக்கல் ரூ.45, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.35,பீட்ரூட், முள்ளங்கி தலா ரூ.30,வெங்காயம் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது. எப்போதும் கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விற்கப்பட்டு வரும் முட்டைகோஸ் நேற்று கிலோ ரூ.20 ஆக உயர்ந்திருந்தது.
கடும் சிரமத்தில் பொதுமக்கள்
வெளிச் சந்தைகளிலும் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி, காய்கறி வாங்கும் அளவை குறைத்து வருகின்றனர்.
விரைவில் விலை குறையும்
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, "தொடர் மழையில் காய்கறி பயிர்கள் அழிந்ததால், சந்தைக்கு காய்கறி வரத்து குறைவாக உள்ளது. அதனால் காய்கறி விலைஉயர்ந்துள்ளது. பயிர் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கிஉள்ளதால், விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றார்.