Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணிக்க வந்த நரிக்குறவர்களுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து வரவேற்ற ஓட்டுநர், நடத்துநர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை

மாநகரப் பேருந்தில் பயணிக்க வந்த நரிக்குறவர்கள் 2 பேருக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து ஓட்டுநர், நடத்துநர் வரவேற்ற வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசுப் பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகத் கூறி, அந்த பேருந்தின்ஓட்டுநர் அவரை கீழே இறக்கிவிட்டார் எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும்அரசுப் பேருந்தில், வள்ளியூரைச் சேர்ந்த 3 பேர் கொண்ட நரிக்குறவர்குடும்பத்தினரை பேருந்தில் இருந்துஇறக்கி விட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்,நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இன்முகத்துடன் வரவேற்று...

இந்நிலையில், சென்னை பெரம்பூரில் மாநகரப் பேருந்தில் (எண்.242) பயணிக்க நேற்று வந்த நரிக்குறவர்கள் 2 பேரை,நடத்துநர், ஒட்டுநர் இன்முகத்துடன் வரவேற்றுள்ளனர்.

மேலும் அவர்களை பேருந்து அருகே நிற்கவைத்து, மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்தனர். நடத்துநர் ஒருவர் பால் பாக்கெட் வாங்கி, அவர்களின் காலில் பாலைப் பீய்ச்சி அடித்தார். பிறகு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, பேருந்து உள்ளே அழைத்துச் சென்று, இருக்கையில் அமர வைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்த வீடியோவைப் பார்வையிட்ட ஏராளமானோர், வரவேற்றும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x