

விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 9 காவல் துறையினர் மட்டுமே பணிபுரிவதால் பாலியல் தொடர்பான புகார்களை விசாரிப்பதில் தொய்வு ஏற்படுவதாக காவலர்களே ஆதங்கப்படுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு சரகத்திற்கு ஒரு மகளிர் காவல் நிலையம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7 சரக உட்கோட்ட காவல் பிரிவுக்கு 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதில் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய இரு சரக உட்கோட்ட காவல் பிரிவுக்கும் சேர்த்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் உட்பட 33 காவலர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இக்காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 12 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும், அதில் 3 பேர் வெளி பணிகளுக்காக வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். தற்போது அந்த காவல் நிலையத்தில் 9 பேர் மட்டுமே உள்ளனர்.
கடலூர் மேற்கு மாவட்டப் பகுதிகளில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் எழும் சூழலில் அது தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் விசாரிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூட வாய்ப்பில்லாத நிலை இருப்பதாக பெண் காவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பணிச்சுமையால் காவலர் களுக்கிடையே மோதல் எழுவதும் வாடிக்கையாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இதில் வாரம் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ள காவல்துறை இயக் குநர் உத்தரவு பிறப்பித்தும் அதை நடைமுறைப்படுத்த வாய்ப் பில்லாத நிலை உள்ளதாகவும் ஆதங்கப்படுகின்றனர். இதனிடையே சில புகார்களின் மீது விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக எஸ்பி, டிஎஸ்பி, முதலமைச்சர் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களுக்கு புகார் அனுப்புகின்றனர். இதனால் மேலிட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள், மாவட்ட நீதிமன்ற வழக்குகள், விருத்தாசலம் விரைவு நீதிமன்ற வழக்குகள் என 3 நீதிமன்றங்களுக்கும் செல்ல தனித்தனி காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எஞ்சிய 3 காவலர்களைக் கொண்டு விசாரணை, கைது என பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் ரீதியாக ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது. புகார்தாரர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்கும் 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டு பிடித்து இழுத்து வரவே ஒரு நாள் ஆகிவிடுகிறது. குறிப்பாக பாலியல் புகாருக்குள்ளாகும் நபர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்து, மருத்துவப் பரிசோதனை நடத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்குள் படாதபாடு படுகிறோம் என கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆய்வாளர் ரேவதியிடம் கேட்டபோது, "காவலர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளிரிடம் முறையிட்டிருக்கிறேன். விரைவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் காவலர்கள் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.