Published : 19 Mar 2016 08:06 AM
Last Updated : 19 Mar 2016 08:06 AM

பிரச்சாரம், தேர்தல் அறிக்கை தொடர்பாக ஜெ.வுடன் நிர்வாகிகள் ஆலோசனை

தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவுடன் மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்.

திமுக, அதிமுக, தேமுதிக என பிரதான கட்சிகள் கூட்டணி தொடர்பான பணிகளை முடிக்கவில்லை. எனவே, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பும் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, தமாகா, மமக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்ப்ப தற்கான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் இக்கட்சி தலைவர்கள் முதல்வரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்க அதிமுக பொதுச்செய லாளரும், முதல்வருமான ஜெய லலிதா முடிவெடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று, முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்று காலை முதல்வரை சந்திக்க, அதிமுக மூத்த நிர்வாகிகளான சி.பொன்னையன் மற்றும் பன்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்பு செயலாளரான தம்பிதுரை ஆகியோர், 10:30 மணியளவில் போயஸ் தோட்டம் வந்தனர். தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை ஆலோசனை நடத்தி விட்டு சென்றனர். அப்போது, முதல்வரின் தேர்தல் பிரச்சார பயணமும் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனையின் போது அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, வளர்மதி, உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோரும் இருந்துள்ளனர்.

முதல்வரின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை பொறுத்தவரை, கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது உருவாக்கப்பட்ட பயணத் திட்டத்தையே தற்போதும் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே பிரச்சாரத்துக்காக பேசிய இடங்களையே தேர்வு செய்துள்ளதாகவும் பிரச்சாரப் பயணம், தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ். ஆஜர்

சமீபகாலமாக ஓ.பன்னீர்செல் வம், நத்தம் விஸ்வநாதன், பழனிச் சாமி உள்ளிட்டோர் அடங்கிய ஐவரணி முடக்கப்பட்டதாக கூறப்பட்டது. வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தவிர மற்ற மூவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று, காலை 10:20 மணிக்கு போயஸ் தோட்டம் வந்த ஓ.பன்னீர்செல்வம், 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், முதல்வரை அவர் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. ‘வீட்டுக்காவலில்’ வைக்கப்பட்டார் என்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அவர் போயஸ் தோட்டம் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x