Last Updated : 11 Dec, 2021 09:02 PM

 

Published : 11 Dec 2021 09:02 PM
Last Updated : 11 Dec 2021 09:02 PM

சட்டையை இறுக்கமாக அணிந்து வந்த மாணவரை தாக்கிய புகார்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கோவை

சட்டையை இறுக்கமாக அணிந்து வந்ததால், மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சத்தி சாலை, கணபதி அருகே, தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோவை சரவணம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 16 வயது மகன், மேற்கண்ட தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் இயற்பியல் பிரிவு ஆசிரியராக அன்னூரைச் சேர்ந்த சிவரஞ்சித்குமார் (32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் தேசிய மாணவர் படையின் ஆசியராகவும் கூடுதல் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். இவர், கணபதி அருகேயுள்ள, கே.ஆர்.ஜி நகரில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி பள்ளியில் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை 16 வயது மாணவரும் வாங்கியுள்ளார்.

வீட்டுக்குச் சென்று அவர் அணிந்து பார்த்த போது, தைத்து வழங்கப்பட்ட அந்த சீருடை அளவில் சற்று பெரியதாக இருந்துள்ளது. இதனால், அவரது பெற்றோர், அந்த சீருடையின் சட்டையின் அளவை மாணவரின் உடலுக்கு ஏற்ப குறைத்து, தைத்து கொடுத்துள்ளர். அந்த மாணவரும், மறுவடிவமைக்கப்பட்ட சீருடை சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அந்த சட்டை மாணவருக்கு இறுக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், அந்த மாணவர் நேற்று (நவ.10) பள்ளிக்குச் சென்ற போது, இறுக்கமாக சட்டை அணிந்து வந்ததற்காக, பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித்குமார் மாணவரை கைகளால் தாக்கியுள்ளார்.

இதில் கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த மாணவர் சரவணம்பட்டி போலீஸாரிடம் இன்று (11-ம் தேதி) புகார் அளித்தார்.

அதில்,‘‘ இறுக்கமாக சட்டை அணிந்து வந்தது ஏன், உடற்பயிற்சிக் கூடத்துக்கா செல்கிறாய் எனக்கேட்டு, இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித்குமார் என்னை தாக்கினார். இதனால் எனக்கு காயங்கள் ஏற்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் ஆசிரியர் சிவரஞ்சித்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323 -ன் (காயத்தை ஏற்படுத்துதல்) கீழ் சரவணம்பட்டி போலீஸார் இன்று மாலை வழக்குப்பதிந்துள்ளனர். இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் கூறும்போது,‘‘மேற்கண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்படவில்லை,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x