

மக்களுடைய வாழ்க்கைதான் இலக்கியம் என்று மாற்றியவர் கி.ரா. என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கரிசல் எழுத்தாளர் கி.ரா.வுக்கு ரூ.1.50 கோடியில் நினைவரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் கனிமொழி, தொழில், தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் நினைவரங்கத்துக்கு அடிக்கல் நாட்டினர். இந்த இடத்தில், நினைவரங்கம், கி.ரா.வின் சிலை மற்றும் நூலகம் ஆகியவை அமைய உள்ளன. தொடர்ந்து, வாரிசு அடிப்படையில் இருவருக்குப் பணி நியமன ஆணையும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 208 பேருக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
முதல்வருக்கு நன்றி
பின்னர் கனிமொழி எம்.பி. பேசும்போது, ''எனது முதல் நன்றி முதல்வருக்குதான். கி.ரா.வுக்கு அமைய உள்ள மண்டபம் வழக்கமாக உள்ள நினைவு மணிமண்டபங்களைப் போல் இல்லாமல் மக்களுக்குப் பயன்பாட்டிலே இருக்கக்கூடிய ஒன்றாக, ஒவ்வொரு நாளும் எந்தக் கலையை கி.ரா. நேசித்தாரோ, எந்த மக்களை நேசித்தாரோ அந்த மக்களின் கலைகளாக இருக்கக்கூடிய, கலைகளை நிகழ்த்துவதற்கான நிகழ்த்துக் கலைக்கூடத்தையும் அவருடைய நினைவு மண்டபத்தில் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு இசைவு தந்து அதை உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கியம் எழுதுவது என்றால் இப்படித்தான் என்ற கட்டமைப்பு இருந்தது. தமிழ் எழுத மற்றும் பேச வேண்டுமென்றால், அதற்கு ஒரு வரி வடிவம், வார்த்தை பிரயோகங்கள் என்றிருந்ததை உடைத்து நொறுக்கி, மக்களுடைய மொழிதான் தமிழ். மக்கள் பேசுவதுதான் தமிழ். அதுதான் இலக்கியம் என்று மாற்றித்தந்தவர்தான் கி.ரா. அவருக்குப் பின்னர்தான் வட்டார வழக்குகள் பற்றி நாம் பேசுகிறோம். ஆராய்ச்சி செய்கிறோம். அதற்குத் தமிழில் வித்திட்டவர் கி.ரா.
மக்களுடைய வாழ்க்கைதான் இலக்கியம். மக்களுடைய மொழிதான் இலக்கியம் என்ற அந்த நிலையை மாற்றித் தந்தவர்தான் கி.ரா. அவர் மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போதும், மிகத் தெளிவான கையெழுத்து, பழைய இலக்கியங்களில் இருந்தெல்லாம் எடுத்துச்சொல்லக்கூடிய அளவுக்கு நினைவாற்றலோடு தனது இறுதி மூச்சு வரை தமிழோடு பயணித்த கி.ரா.வுக்கு நன்றி செலுத்தக்கூடிய வகையில் இந்த நினைவரங்கம் அமைக்கப்பட உள்ளது” என்றார்.
எழுத்துகளால் வசீகரப்படுத்தியவர்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”ஏறத்தாழ 100 ஆண்டு காலம் தமிழ் இலக்கிய உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடம் பதித்த பெருமகனாக வாழ்ந்து மறைந்தவர் கி.ரா. அவர் வாழ்ந்து மண், இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்கள், அவர் கால்தடம் பதித்த கிராமங்கள், அவருடைய வாழ்வியல், நெறிமுறைகள் ஆகியவற்றைக் குறித்துதான் அவரது எழுத்துகள் இருந்தன. அவரது மறைவுக்குக் கடல் தாண்டி உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் கண்ணீர் சிந்தின. அந்த அளவுக்குத் தன்னுடைய எழுத்துகளால் அனைவரையும் வசீகரப்படுத்தியவர்.
அவர் மறைந்துவிட்டாலும் இடைசெவல் கிராமம் இருக்கும் வரையிலும், கோபல்லபுரம் இருக்கும் வரையிலும் அவர் புகழ் இருக்கும். தமிழ் இருக்கும் வரை அவரது புகழ் நீடித்து நிலைத்து நிற்கும். அவருக்குத் திருவுருவச் சிலை, நினைவைப் போற்றக்கூடிய நினைவரங்கம், நூலகம் அமைய இருப்பது சாலச்சிறப்புடையதாக இருக்கிறது.
பொதுவாக நினைவாலயங்கள் ஏற்படுத்தும்போது, அவருடைய பிறந்த நாள், நினைவு தினத்திலோ வந்து மாலையிடுவது என்ற சம்பிரதாயமாக முடிந்துவிடாமல், கி.ரா.வுக்கு அமைக்கக்கூடிய நினைவுச் சின்னங்கள் தொடர்ந்து வெகுஜன மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற உணர்வோடு தமிழக முதல்வரும், குறிப்பாக இந்த நினைவகம் இங்கு அமைய வேண்டுமென்று முழுக்காரணமாக இருந்து செயல்படுத்தித் தந்த கனிமொழி எம்.பி., முன்னின்று முழுமையாக திட்டமிட்டு இது இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நினைவகமாக இருக்க வேண்டும் என வடிவமைத்துள்ளனர். கி.ரா.வுக்குச் சிறப்பு சேர்த்துள்ள கனிமொழி மற்றும் அமைச்சர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதில், பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் பி.தேவி, உதவி நிர்வாக பொறியாளர் அருள் நெறிசெல்வன், உதவிப் பொறியாளர்கள் பரமசிவன், சரத்குமார், சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மைக்கேல் அந்தோணி, உதவிச் செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாய்வு நாற்காலி
மேலும், கனிமொழி எம்.பி. பேசுகையில், ”நான் ஒவ்வொரு முறையும் புதுவையில் சந்திக்கும்போது, கி.ரா. ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பார். அந்தச் சாய்வு நாற்காலியைச் செய்து தந்தவர் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் என்பது எனக்கு அப்போது தெரியாது” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.32 லட்சத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.