

கோவை தனியார் பள்ளியில் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"கோவை கணபதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும், தவறு செய்தால் தண்டித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரு மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக் கூடாது.
காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.