Published : 11 Dec 2021 03:53 PM
Last Updated : 11 Dec 2021 03:53 PM

வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கண்டறிய தீவிர பரிசோதனை:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோப்புப் படம்

சென்னை

வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கண்டறிய தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (11.12.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள வார்டு-134க்குட்பட்ட ரங்காஜபுரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

"தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒரு மைல் கல்லாக தொடர்ந்து 14வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (11.12.2021) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியானது ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டு, மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 7, 54,02,698 நபர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். முதல் தவணை 81.30சதவித பேருக்கும், இரண்டாவது தவணையாக 48.95 சதவித பேருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 53.50 சதவித என்கின்ற அளவில் உள்ளது. இதனை இந்திய அளவிலான இலக்கை எட்டுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் 4,70,65,514 முதல் தவணை தடுப்பூசியும், 2,83,37,184 இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாவது தவணை தடுப்பூசியானது 94,15,147 நபர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது. தற்பொழுது, 95,78,890 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இலக்கு வைத்து இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை தொடர்ந்து இந்தத் தடுப்பூசி முகாம்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் 1,600 இடங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுவரை 3,32,442 கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 13 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலமாக 2,43,24,138 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏறத்தாழ 78 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் இதுவரை 85% நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மாநில அளவில் 48.95% நபர்கள் இரண்டாவது தவணை செலுத்தியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் அதையும் கடந்து 60% என்கின்ற அளவில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற 13 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 20,800 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 19,71,950 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வரும் பெருந்தொற்றுகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

எனவே, முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய பொதுமக்கள் அனைவரும் தயக்கம் காட்டாமல் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் டாக்டர் எம்,ஜி.ஆர் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், ஐஐடி இயக்குநர்கள் மற்றும் பதிவாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், பொறியியல் கல்லூரி இயக்குநர்கள் ஆகியோருடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரால் கூட்டம் நடத்தப்பட்டு சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 18 வயதை கடந்த கல்லூரி மாணவர்களுக்கு நூறு சதவிகித தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தற்பொழுது கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியானது முதல் தவணை 81% கடந்தும், இரண்டாவது தவணை 49%யை எட்டியுள்ளது. இன்று மாலைக்குள் 50%யை எட்டும் பட்சத்தில் தேசிய அளவில் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டவர்களின் இலக்கை தொடும் நிலை இருந்தாலும், இன்னும் 94 லட்சம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. புதிது புதிதாக ஒமைக்ரான் போன்ற பல்வேறு வைரஸ்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. எனவே, தமிழகத்தைச் சார்ந்த பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் கோவிட் தடுப்பூசியினை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒமைக்ரான் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலேயும் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது, ஒமைக்ரான் பாதிப்புள்ள (High risk) நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கோவிட் RT-PCR பரிசோதனைகள் செய்வது, ஒமைக்ரான் பாதிப்பில்லாத (Non Risk) நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு Random பரிசோதனைகள் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன.

இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட (High Risk) நாடுகளிலிருந்து வந்த 9,819 நபர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 11 நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பில்லாத (Non Risk) நாடுகளிலிருந்து வந்த 43,938 நபர்களில் கோவிட் உத்தேச பரிசோதனை என்கின்ற முறையில் 1,303 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 5 நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை பரிசோதித்ததில் 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் 9 நபர்களுக்கும், திருச்சி அரசு மருத்துவமனையில 4 நபர்களுக்கும், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும், சென்னையில் தனியார் மருத்துவமனையில் 2 நபர்களுக்கும், நாகர்கோவில் ஒருவர் மற்றும் பெங்களூரில் ஒருவர் என 18 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முதற்கட்ட ஆய்வில் அனைவருக்கும் டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றினை முழுமையாக உறுதி செய்வதற்கு இவர்களின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள இன்ஸ்டம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது." என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x