

குன்னூர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபிஸர் பிரதீப்பின் உடல் சாலை வழியாக கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, நஞ்சப்ப சத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரில் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீஸர் ஏ.பிரதீப்பும் ஒருவர். இவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (11-ம் தேதி) காலை 11 மணிக்கு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் வெளியுறவுத்துறை மத்திய இணையமைச்சர் முரளீதரன் உடன் வந்தார்.
சூலூர் விமானப் படைத் தளத்தில் உயிரிழந்த ஏ.பிரதீப்பின் உடலுக்கு மத்திய இணையமைச்சர் முரளீதரன், திருச்சூர் எம்.பி., பிரதாபன், கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து காலை 11.22-க்கு ஜூனியர் வாரண்ட் ஆபிஸர் பிரதீப்பின் உடல் அமரர் ஊர்தி மூலம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வாகனத்துக்கு முன்னர் பைலட் வாகனம் சென்றது.
வாளையாறு :
பிரதீப்பின் உடல் சூலூரில் இருந்து கொச்சின் பைபாஸ், பாலக்காடு வழியாகத் திருச்சூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழக - கேரளா எல்லையான கோவை வாளையாற்றில், கேரள மாநில அமைச்சர்கள் கே.ராஜன் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியர்கள் ஹரிதா குமார் (திருச்சூர்), முரன் ஜோஷி (பாலக்காடு) ஆகியோர் பிரதீப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உடலைப் பெற்றுக் கொண்டு திருச்சூருக்கு எடுத்துச் சென்றனர்.
உயிரிழந்த பிரதீப்பிற்கு மனைவி, 7 வயது மகன், இரண்டரை வயது மகள் ஆகியோர் உள்ளனர். பிரதீப்பின் தந்தை கடந்த சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது பிராணவாயு உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.