Last Updated : 11 Dec, 2021 01:25 PM

 

Published : 11 Dec 2021 01:25 PM
Last Updated : 11 Dec 2021 01:25 PM

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா விழா:  கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது  

கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று (டிச.11) நடந்தது. உச்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்கிட கோவில் கொடிமரத்தில் காலை 7:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் எம்பெருமான் நடராஜரின் வீதியுலா கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10 நாட்கள் நடைபெறும் ஆருத்ரா விழாவில், 12-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 13-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 14-ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் எம்பெருமான் நடராஜர் வீதி உலா நடைபெறவுள்ளது. இதேபோல் 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 16-ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 17-ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 18-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக் குதிரையிலும் வீதி உலா நடைபெறவுள்ளது.

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மன் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது.

20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளது.

21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது. கொடியேற்றம், தேர்த் திருவிழா, தரிசன விழா ஆகியவற்றுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டருந்த நிலையில், காலை போலீஸார் பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.

பின்னர் தீட்சிதர்கள் 4 வீதிகளின் கதவுகளைத் திறந்து வைத்திருந்ததால் போலீஸார் பொதுமக்களை அனுமதித்தனர். இதனிடையே, அரசு உத்தரவை மீறியுள்ள தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x