

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு கவிதைகள் மூலம் விடுதலை வேட்கை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவரும், தமிழக முதலவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
"நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
திறம்பாட வந்த மறவன்!
அறம்பாட வந்த அறிஞன்!
படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் இன்று!
தமிழுக்குத் தொண்டு செய்த அப்பைந் தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!"
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
"எட்டயபுரத்தில் பிறந்து எட்ட முடியாத உயரங்களைத் தொட்ட பாரதியாரின் 140-வது பிறந்த நாள் இன்று. தேச விடுதலை, பெண் விடுதலை, கல்வி, விளையாட்டு என அத்தனை குறித்தும் தொலைநோக்கு கொண்டிருந்த மாமனிதன். அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வது நமக்குப் பெருமை!
பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவரது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க அவரது எழுத்துகளைத் தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. வெல்க பாரதியார்.... நனவாகட்டும் அவனது கனவுகள்!"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
"கேட்கும்போதே உணர்வூட்டும் ஒப்பற்ற கவிதைகளைப் படைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் இன்று.
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழி மீது மாளாத பற்று எனத் தனித்துவக் கவிஞராகத் திகழ்ந்த அந்த மகா கவிஞனை ஒவ்வொரு கணமும் போற்றிக் கொண்டாடிடுவோம்."
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.