Published : 07 Mar 2016 08:08 AM
Last Updated : 07 Mar 2016 08:08 AM

என்னை விமர்சனம் செய்யுங்கள்; அது எனக்கு பிடிக்கும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

‘என்னை விமர்சனம் செய் யுங்கள். அது எனக்கு பிடிக்கும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பத்திரிகைகளில் வெளியிட்ட அறிக் கைகள் ‘என் கடன் பணி செய்வதே’ என்ற தலைப்பில் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. ‘சமூக நீதியும், தமிழும் என் உயிர் மூச்சு’, ‘மக்களைக் காக்க மதுவிலக்கு’, ‘ஒரே தீர்வு - தமிழ் ஈழம்’, ‘நதிநீர் பிரச்சினைக்கு நான் விரும்பும் தீர்வு’, ‘எழுக தமிழ்நாடே’ என 5 தொகுதிகளாகவும் டிவிட்டரில் அவர் வெளியிட்ட கருத்துகளை தொகுத்து ‘என் குறள்’ என்ற தலைப்பிலும் 6 நூல்களின் வெளி யீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது.

விழாவுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். ராமதாஸ் வரவேற்று பேசினார். நூல்களை ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் வெளியிட, டெக்கான் கிரானிக்கல் நிர்வாக ஆசிரியர் ஆர்.பகவான் சிங், மூத்த பத்திரிகையாளர் மாலன், அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் ராமதாஸ் பேசிய தாவது:

நான் எழுத்தாளன் அல்ல; போராளி. எங்கு தீமை நிகழ்ந் தாலும் அதை எதிர்க்கின்ற போராளி. எதிர்க்கட்சி என்ற கடமையில் இருந்து வழுவாமல் அதை கடைபிடித்து வருகிறேன். தேவையில்லாமல் யாரையும் விமர்சிப்பது இல்லை. எனது அறிக்கைகளில் பிரச்சினைகளை யும், அதற்கான தீர்வுகளையும் சொல்கிறேன்.

ஜனநாயகத்தின் 4-வது தூண் மீடியா. அவர்களால்தான் எதையும், யாரைப் பற்றியும் சொல்ல முடியும். எழுத முடியும். திருத்த முடியும். மற்ற தூண்கள் சரிந்தாலும், இந்த தூண் சரியாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது மது, ஊழல். இவை முன்னேற்றத்துக்கு எதிரிகள். என்னை விமர்சனம் செய்யுங்கள். எனக்கு அது பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

ராமதாஸ் என்னுடைய நீண்ட நாள் நண்பர். பாமக 1989-ல் உருவானது. ஆனால் அதற்கு முன்பாகவே சமூக நீதி, அரசியல் சீர்திருத்தங்களை பெரியார் செய்துள்ளார். அதேபோல ராமதாஸ் போராளியாக இருக்கிறார்.

‘ஒரே தீர்வு - தமிழ் ஈழம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பாமக கடந்த 13 ஆண்டுகளாக நிழல் நிதிநிலை அறிக்கையையும், கடந்த 5 ஆண்டுகளாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையையும் வெளி யிட்டு வருகிறது. இது வரவேற் கத்தக்கது.

மத்தியில் மோடி அரசு வந்த பிறகு ஒரு மோசமான போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இந்து நாடு என்கின்றனர். அரசியல் சட்டத்துக்கு எதிராகக்கூட பேசி யுள்ளனர். இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்த பிரச்சினைகளை எல்லாம் தேர்தலுக்கு பிறகு ராமதாஸ் கையில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

விழாவில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, சவுமியா அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு

விழாவுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிடும். வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள் அதிகம் இடம்பெறுவர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்களிடம் ஒரே ஒருமுறை மட்டுமே பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பிறகு அவர்கள் பேசவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x