

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
2019-ல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவராக வெங்கடாசலம்.நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செப்டம்பர் 23-ம் தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வெங்கடாசலத்தின் அலுவலகம், அவரது வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தனமரப் பொருட்கள், 4 கிலோ வெள்ளிஉள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டில், வெங்கடாசலம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.