

நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் 9-ம் தேதிபேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கீழமை நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? கீழமை நீதிமன்ற வளாகங்களில், பெண்களுக்கு தனி ஒதுங்கிடங்கள் எந்த அளவுக்கு உள்ளன? நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, அரசு மேற்கொண்ட முயற்சிகள், இதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில்:
நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. ஏற்கெனவே வகுக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறைமைகளின் அடிப்படையில், நீதித் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறது.
1993-94 முதல் இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ. 8,709 கோடி வழங்கியுள்ளது. நீதிமன்ற அறைகள், நீதித் துறை அதிகாரிகள், பணியாளர்கள் குடியிருப்புகள், துணை நீதிமன்றங்களுக்கு இத்தொகை செலவிடப்படுகிறது.
இத்திட்டம் 2021 ஏப்.1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, அதற்காக, ரூ.9 ஆயிரம் கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.5,307 கோடி.
மாவட்ட, துணை நீதிமன்றங்களில் ஒதுங்கிடங்கள், கணினி அறைகள், வழக்கறிஞர்கள் அமரும்கூடம் ஆகியவற்றை கட்டும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற பதிவாளரின் கணக்குப்படி நாடு முழுவதும் 26 சதவீத நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கு தனி ஒதுங்கிடங்கள் இல்லை. உயர் நீதிமன்றங்களின் கணக்குப்படி, மாவட்ட மற்றும் துணை நீதிமன்ற வளாகங்களில் 20,565 நீதிமன்ற அறைகள், 18,142 குடியிருப்புகள் உள்ளன. மேலும் 2,841 நீதிமன்ற அறைகள், 1,807 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.