

குன்னூரில் இந்திய விமானப் படையின், எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வானில் பறந்தபோது, சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கிடையே, வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைஅறிந்து, வீடியோ எடுத்த கோவைராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோ என்ற குட்டி, அவருடன் சுற்றுலா சென்றிருந்த கோவையைச் சேர்ந்த நாசர் ஆகியோர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். காவல் ஆணையர் பிரதீப்குமாரை சந்தித்து விளக்கமளித்ததுடன், வீடியோ எடுத்தது தொடர்பாக விசாரிக்க எப்போது அழைத்தாலும் வருவதாக தெரிவித்தனர்.
பின்னர், ஜோ என்ற குட்டி கூறியதாவது: நான் திருமண புகைப்படக் கலைஞராக வேலை செய்து வருகிறேன். கடந்த 8-ம் தேதி, நாங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றோம். செல்லும் வழியில் குன்னூர் காட்டேரி பூங்கா அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மலை ரயில் செல்லும் தண்டவாளத்தில் புகைப்படம் எடுப்பதற்காக கீழே இறங்கிச் சென்றோம்.
நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்ததால், எதேச்சையாக என்னுடைய செல்போனைஎடுத்து, ஹெலிகாப்டர் செல்வதை நான் வீடியோ எடுத்தேன். ஹெலிகாப்டர் மிகுந்த சத்தத்துடன் வந்ததாலும், நேரில் பார்ப்பதாலும் வியப்பில் அவ்வாறு வீடியோ எடுத்தேன். அதைத் தொடர்ந்து, சில நிமிடங்களில், அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டது. இச்சம்பவத்தால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துவிட்டோம்.
கோவைக்கு வரும் வழியில் காவல் ஆய்வாளர் ஒருவரை சந்தித்தோம். நடந்த சம்பவத்தை கூறி அவரிடம் வீடியோவை ஒப்படைத்தோம். அதன் பிறகுதான், அந்த வீடியோ வெளியாகிஇருக்கலாம் என்றனர்.