

திருப்பூர் மாவட்டம் முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை சமையல் எரிவாயு உருளையில் ஒட்டி அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
திருப்பூர் கொங்கு பிரதான சாலையிலுள்ள சமையல் எரிவாயு முகவர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், எரிவாயு உருளையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, விநியோகத்துக்கு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி.
இதுதொடர்பாக அவர் பேசும்போது, “சட்டப்பேரவைத் தேர்தல் - 2016ஐ முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக அனைத்து குடும்பங்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைகளில் (காஸ் சிலிண்டர்) விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாநகரில் 24 எரிவாயு முகவர்கள் மூலமாக சுமார் 3 லட்சம் குடும்பங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 52 முகவர்கள் மூலமாக சுமார் 7 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளைகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
வாடிக்கையாளரிடம் வழங்கப் படும் கட்டணப் பட்டியலுடன், வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படும். இந்தத் துண்டுப் பிரசுரங்கள், அருகே உள்ள வீடுகளுக்கும் வழங்கப்படும்” என்றார்.
வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ப.முருகேசன், உதவித் தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.