

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் உடல் முழு வதும் சகதியைப் பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 14-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூத வாகனம், காமதேனு, ரிஷபம், மயில், யானை, சிம்ம, அன்னப்பறவை ஆகிய வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
ஆண்கள் உடல் முழுவதும் சகதியைப் பூசி விநோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி கமுதியில் கடந்த 100 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
ஆண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடல் முழுவதும் சகதியைப் பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து, கழுத்தில் மாலையுடன், கையில் வேப்பிலையை ஏந்தி ஆடிப்பாடி, கமுதியின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயில் வெளியில் நின்றும், சகதியில் படுத்து உருண்டும் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இதன்மூலம் பக்தர்கள் கோடை வெயிலில் இருந்து தங்களின் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் படை, தேமல் உள்ளிட்ட தோல் வியாதிகள் தாக்கத்தில் இருந்தும், மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் ஆகியவற்றில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாக நினைக்கின்றனர்.
நேற்று இரவு முத்துமாரியம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நகர் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (மார்ச் 24) 2,007 திருவிளக்கு பூஜையும், நாளை (மார்ச் 25) முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளன.