ரூபிக் கியூப் விளையாட்டில் 5 வயது சிறுமி கின்னஸ் சாதனை

ரூபிக் கியூப் விளையாட்டில் 5 வயது சிறுமி கின்னஸ் சாதனை
Updated on
1 min read

ரூபிக் கியூப் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுமி கோதை வாஹ்ருணி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு - கவுசல்யா மகளான கோதை வாஹ்ருணி முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதலே கதைகள் கேட்பது, புதிர் போடுவது, அதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

சுடோகு விளையாட்டில் ஆர்வமாக இருந்ததைக் கண்ட அவரதுபெற்றோர் சுடோகு போல் உள்ள ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆர்வத்துடன் விளையாடத் தொடங்கிய கோதை அதில் வல்லுநராகவும் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியைத் தொடங்கிய கோதையின் சாதனைப் பயணம் இன்று கின்னஸ் சாதனை வரை நீண்டு கொண்டிருக்கிறது. பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது விரல்களால் சில விநாடிகளில் வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

குறிப்பாக ‘ஹூலா ஹூபிங்’ எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டே ‘டெட்ரா ஹெட்ரான்’ எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 விநாடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 18 வயது வாலிபர் 13.86 விநாடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 விநாடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந் துள்ளார்.

பதக்கம், சான்றிதழ்

மேலும், ‘மாஸ்டர் மார்பிக்ஸ்’ எனப்படும் கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ‘ஹூலா ஹூபிங்’ செய்துகொண்டே 1 நிமிடம் 59 விநாடிக்குள்ளும், ‘மெகாமின்க்ஸ்’ எனப்படும் 8 பக்கம் கொண்ட கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in