

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்றுநடைபெற்ற 10 நிமிட வாகன நிறுத்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று 10 நிமிட வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை பல்லவன்சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை வகித்தார். இதில், மாநில நிர்வாகிகள், கே.திருச்செல்வன், எம்.சந்திரன், ஆ.கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலர் ஜி.சுகுமாறன் கூறும்போது, "சிஐடியு நடத்திய வாகன நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
அவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆட்டோக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இதேபோல் காஞ்சி, செங்கை, திருவள்ளூரிலும் போராட்டங்கள் நடைபெற்றன.