

சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் புதையுண்டுள்ள சங்க காலக் கட்டிடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரையை ஒட்டி பெரிய நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறையின் அகழாய்வு பிரிவு சார்பில் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் அகழ் வாராய்ச்சி கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. அப்போது சங்க கால மக்கள் வாழ்ந்த கட்டிடங்கள், தமிழ் பிராமி மண்பாண்ட ஓடுகள், உறை கிணறுகள், ரோமானிய மண்பாண்டங்கள், முத்து, பவளம், எழுதுபொருட்கள், இரும்பு ஆயுதங்கள் உள்ளிட்ட 1,800 வகை யான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன.
மேலும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை மேற் கொள்ள அத்துறைத் தலைவர் கடந்த ஆண்டு அனுமதி அளித்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் சத்தியபாமா பத்ரிநாத், ஜனவரி 18-ம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்தார். இதில் ஏரா ளமான தொல்லியல் எச்சங்கள், சான்றுகள் கிடைத்து வருகின்றன.
இது குறித்து கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா `தி இந்து’விடம் கூறியதாவது:
இரண்டாம் கட்ட அகழாய்வில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன. தற்போது 39 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் பல குழிகள் தோண்டப் படும். இங்கு புதையுண்டுள்ள சங்க காலக் கட்டிடங்கள் பல கிடைத்துள்ளன. சங்க காலத்தில் ஒரு நகரம் இருந்ததற்கான அனைத்து தடயங்களும் உள்ளன.
நீண்ட நெடிய சுவர்கள், செங்கலால் ஆன வாய்க்கால், தொடர்ச் சியான சுவர்கள் போன்ற நகரத்திற்கான அனைத்து அடையா ளங்களும் உள்ளன. சுமார் 4 அடி ஆழத்திலேயே ஏராளமான கட்டிடங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் இதுபோன்று அதிகமான சங்ககாலக் கட்டிடங்கள் கிடைப்பது இங்குதான்.
ஜனவரியில் தொடங்கி இதுவரை 1,600 தொல்பொருட்கள் கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது. தமிழ் பிராமி மண்பாண்ட ஓடு, அரிய வகை கல் மணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பா லான அம்பு முனைகள் கிடைத் துள்ளன. இன்னும் ஆழமாக தோண்டும்போது அரிய வகை ஆதாரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.