Published : 10 Dec 2021 11:24 AM
Last Updated : 10 Dec 2021 11:24 AM

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி: நீலகிரியில் முழு கடையடைப்பு

உதகை

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவ மையத்தோடு, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவுடனான நட்பு நாடுகளாகக் கருதப்படும் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராணுவப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோராவர்.

இப்பயிற்சி அதிகாரிகளுக்காக ஆண்டுதோறும் 30 விரிவுரைகளும், 4 கருத்தரங்குகளும், 10க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படும். இவற்றில் இந்திய குடியரசுத் தலைவர் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படைகளின் தளபதிகள், முப்படைகளின் மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பது வழக்கமாகும்.

அதேபோல, வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அருங்காட்சியகத்தைத் திறப்பதற்காகவும், பயிற்சி ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு அரங்கைத் திறந்து வைப்பதற்காகவும் நேரம் ஒதுக்கியதோடு, பயிற்சி அதிகாரிகளுக்காக விரிவுரையாற்றவும் பிபின் ராவத் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் ஏற்கெனவே இந்திய ராணுவத் தளபதியாக இருந்தபோதும், முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தபோதும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்துள்ள நிலையில் மூன்றாவது முறையாகவும் வருவதற்கு ஒப்புக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்.கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங்க் கமாண்டர் பிரித்விசங் சவுகான், ஸ்குவார்டன், லிடர் கே.சிங், ஜே.டபூள்யு.ஓ தாஸ், ஜே.டபூள்யு.ஓ. பிரதீப், ஹவில்தார் சத்பால், நாயக் ஜிதேந்தர், நாயக் குர்சேவக் சிங், லேன்ஸ் நாயக் விவேக்குமார், லேன்ஸ் நாயக் பி. சாய்தேஜா ஆகிய 13 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்தில் கேப்டன் வருண் சிங் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் அனுமதிக்கப்பட்டார்.

வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

கடையடைப்பு:

இந்நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 2,500 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் இன்று காலையில் மூடப்பட்டிருந்தன. உதகை நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறிக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்களை விற்கவும், வாங்கவும் மக்கள் வந்த வண்ணம் இருப்பர்.

இன்று காலை இந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. உதகை கமர்சியல் சாலையில் செல்போன் கடைகள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், எலக்ட்ரிக் கடைகள் என 300-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. பெரும்பாலும் ஜவுளிக் கடைகளே அதிக அளவில் உள்ளன. இதனால் இங்கு எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்தக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால் காலையில் இருந்தே இந்தப் பகுதியில் எந்தவொரு வாகனத்தையோ, மக்கள் நடமாட்டத்தையோ பார்க்க முடியவில்லை. இந்தப் பகுதியே மிகவும் அமைதியாகக் காணப்பட்டது.

குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுப்புறப் பகுதிகளான அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, டெட்போர்டு, சேலாஸ், எலநள்ளி, கொடநாடு, கட்டபெட்டு, கொட்டகெம்பை, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், குஞ்சப்பனை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் செயல்படக்கூடிய டீக்கடைகள், உணவகங்கள், பெரிய, பெரிய வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

குன்னூர் மற்றும் கோத்தகிரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்குத் தங்கள் துக்கத்தைக் கடைப்பிடித்தனர்.

கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் திரண்டு கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மவுன ஊர்வலமாகச் சென்று ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் தனியார் பேருந்துகள் இன்று ஓடவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் மட்டுமே வழக்கம்போல் இயங்கின. தனியார் பஸ் மற்றும் ஆட்டோ போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை. நீலகிரிக்கு வாரத்தின் அனைத்து நாட்களுமே சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், இன்று சுற்றுலாப் பயணிகள் வருகையும் மிகவும் குறைவாகவே இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x