Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

சென்னை மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா டிச.20-ம் தேதி தொடங்குகிறது: மெய்நிகரில் களைகட்டும் நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு

சென்னை மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா மெய்நிகர் வடிவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது:

மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசைவிழாவை டிச.20-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தொடங்கி வைக்கிறார். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மெய்நிகர் வடிவில் இசை விழா நிகழ்ச்சிகள் நடந்தன. அதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். இந்த ஆண்டும் இசை விழா நிகழ்ச்சிகள் முழுவதும் மெய்நிகர் வடிவிலேயே நடக்க உள்ளன.

உலகம் முழுவதும் மியூசிக் அகாடமி நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை அடுத்து, இந்த ஆண்டு தனிநபர் குரல் இசை, வாத்தியங்கள் இசை ஆகியவற்றோடு ஹரி கதை மற்றும் காலையில் கருத்தரங்குகளும் நடக்க உள்ளன. உலகம் முழுவதும்இருக்கும் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த பிரபலமான கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து அதற்கான டிக்கெட்டை பெற்றுப் பார்க்கவும் வழி இருக்கிறது. அல்லது, 24 கட்டண நிகழ்ச்சிகளையும் டிக்கெட் வாங்கிப் பார்க்கலாம்.

டிக்கெட் கட்டண விவரம்

ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான (இந்திய குடிமக்களுக்கு) டிக்கெட் விலை ரூ.350. வெளிநாட்டு ரசிகருக்கான கட்டணம் 10 டாலர். எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்கான மொத்த கட்டணம் (இந்திய குடிமக்களுக்கு) ரூ.7,000. வெளிநாட்டு ரசிகருக்கு 200 டாலர். கட்டண நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதில் இருந்து 48 மணி நேரம் இருக்கும். கட்டணமில்லாத நிகழ்ச்சிகளை, பதிவேற்றிய பிறகு வலைதளத்திலேயே எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மியூசிக் அகாடமியில் மாலையில் நடக்கும் இசைநிகழ்ச்சிகள் மனதுக்கு இதமளிக்கும். அதற்கு சற்றும் சளைக்காதவை காலை நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளும், செயல்விளக்க கூட்டங்களும். இசை குறித்தும், இசைவாணர்கள் குறித்தும் நாம்அறியாத பல புதிய தகவல்களும் ஆய்வு விளக்கங்களும் அரங்கேறும். இதில், டிச.24-ம் தேதி எழுத்தாளர், கட்டுரையாளர் லலிதாராம், காருக்குறிச்சி பி.அருணாசலம் நூற்றாண்டை ஒட்டி அவரைப் பற்றி சிறப்பு கருத்துரை வழங்குகிறார். டிச.28-ம் தேதி ராஜம் அய்யரின் நூற்றாண்டை ஒட்டி அவரைப் பற்றிய சிறப்பு கருத்துரையை கர்னாடக இசைப் பாடகி எஸ்.சவுமியா வழங்குகிறார்.

இளம் பாடகர்களின் (ஜூனியர், சப்-ஜூனியர்) நிகழ்ச்சிகளை மியூசிக் அகாடமியின் யூ-டியூப்பில் பதிவேற்றிய பிறகு, இலவசமாகவே காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் பிரபல பாடகர்கள் சஞ்சய் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன், காயத்ரி வெங்கட்ராகவன், அம்ருதா வெங்கடேஷ், சந்தீப் நாராயண், ராமகிருஷ்ண மூர்த்தி, திருச்சூர் சகோதரர்கள், சாகேதராமன், ஹரி கதா விதூஷி விசாகா ஹரி ஆகியோரின் நிகழ்ச்சிகள் மெய்நிகரில் ரசிகர்களை மெய்மறக்கவைக்க தயாராகிவிட்டன.

உங்களின் மனம்கவர்ந்த இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியை காண்பதற்கான டிக்கெட்டைப் பெற:

https://musicacademymadras.in/tickets என்ற தளத்தையும், நிகழ்ச்சிகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய https://musicacademymadras.in/events/95th-annual-concerts-digital-2021-2/ என்ற தளத்தையும் நாடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x