

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2021-22 நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு ரூ.816 கோடி உட்பட தமிழக அரசுக்கு ரூ.1,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் 8-ம் தேதி பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழகத்தில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரை பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி தமிழக அரசிடம் இருந்து, கோரிக்கை வந்துள்ளதா? உயிரிழந்தவர்கள், சேத விவரங்களை தர வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்துள்ள பதில்:
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விண்ணப்பம் வந்துள்ளது. பலத்த மழைவெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, ரூ.549.63 கோடி நிதியுதவி கேட்டுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர். 6,871 கால்நடைகள் இறந்துள்ளன. வீடுகளுக்கும், 51,025 ஹெக்டேரில் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
குழு அறிக்கை அடிப்படையில்..
பேரிடர் மேலாண்மை மாநில அரசின் பொறுப்பாகும். அதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மத்திய அரசின் விதிமுறைப்படி ஒப்புதல் பெற்று, மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்துக்காக வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, கடுமையான பாதிப்புகளுக்கு, மத்திய அரசு சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரைப்படி நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு, நவம்பர் 21 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ள சேதத்தை பார்வையிட்டது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் விதிமுறைகளின்படி நிதியுதவி வழங்கப்படும்.
2021-22 நிதியாண்டில் தமிழக அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின்பங்கு ரூ.816 கோடி ஆகும். மத்திய அரசின் பங்கு முன்னதாகவே 2 தவணைகளில் ரூ.408 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.