

பெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில் விசாகா கமிட்டிக்கு எதிராக சிறப்புடிஜிபி தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மூத்தஐபிஎஸ் அதிகாரியான சிறப்புடிஜிபி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், விசாகா கமிட்டிக்கு எதிராகவும், அதன் அறிக்கையை தனக்கு வழங்கக் கோரியும் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நடந்தது.
அப்போது, தமிழக டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில்மனுவில் கூறியிருந்ததாவது:
விசாகா கமிட்டி அறிக்கை
சிறப்பு டிஜிபிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முதலில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன்பிறகு இதுதொடர்பாக விசாரிக்ககூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த விசாகா கமிட்டியின் அறிக்கை இதுவரை துறை ரீதியாகஎங்களுக்குக்கூட வழங்கப்படவில்லை. அதனால், அந்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க இயலாது. எனவே இதுதொடர்பாக சிறப்பு டிஜிபி தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
அதன் பிறகு, சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாகா கமிட்டி அறிக்கையை அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிச.17-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.