

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என முப்படை தலைமை தளபதி தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதை, அங்குள்ள குடியிருப்புவாசிகளும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களும் பார்த்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்று பார்த்தபோது, அருகில் நெருங்க முடியாதபடி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த வாளி, பாத்திரம், குடம் போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே,தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் 2 பேர் படுகாயங்களுடன் முனகிக் கொண்டிருப்பதைப் பார்த்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து அவர்களை பெட்ஷீட்டில் சுற்றி மீட்டு தூக்கிச் சென்றனர். அப்போது முதலில் எடுத்துச்செல்லப்பட்ட நபர்,‘ஐ ஆம் பிபின்ராவத்’ எனக் கூறிவிட்டு, குடிக்கதண்ணீர் வேண்டும் எனக் கேட்டுஉள்ளார். தூக்கிச் சென்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிபின் ராவத் உயிர் பிரிந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட மற்றொருவர் குரூப் கேப்டன் வருண் சிங் ஆவார்.
மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறும்போது, ‘‘படுகாயங்களுடன் ஒருவரை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்டோம். அவர் தன்பெயரை கூறி, குடிக்க தண்ணீர்கேட்டார். தீயில் அவர் படுகாயம்அடைந்ததால், தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து நான்உள்ளிட்ட சிலர், உங்களது உடல்நிலை நலமாக உள்ளது எனக் கூறி வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பகுதி வழியாக வாகனம் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தோம்’’ என்றார்.
பனிமூட்டத்தில் மறைந்த ஹெலிகாப்டர்
சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து பிபின் ராவத் உட்பட 14 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், தொடர்ந்து சூலூர் விமானப்படை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. மேட்டுப்பாளையம் அருகேசென்றபோது, ஹெலிகாப்டருடனான தொடர்பு சரிவர கிடைக்காமல் இருந்த நிலையில், பர்லியாறு பகுதியை கடந்தபோது முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. சந்தேகமடைந்த சூலூர்விமானப் படையினர் குன்னூர் ராணுவப் பயிற்சி கல்லூரி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னும் வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ராணுவத்தினர் தொடர்ந்து விசாரிக்கும்போது, தீயணைப்புத் துறையினர் வனப்பகுதியில் நடந்த தீ விபத்துக்காக சென்றிருப்பதை அறிந்தனர். அதன் பின்னரே, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது ராணுவத்தினருக்கு தெரியவந்தது.
மேலும், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதிக்கு அருகே ஏறத்தாழ 50 அடி தூரத்தில் ரயில் தண்டவாளம் உள்ளது. இதன் வழியாக நடந்து வந்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், தனது செல்போனில் ஹெலிகாப்டர் வருவதை வீடியோ எடுத்துள்ளார். அந்த ஹெலிகாப்டர் பனி மூட்டத்துக்குள் நுழைந்து மறைந்த சில நிமிடங்களில் பெரும் சத்தம் கேட்கிறது. அவருடன் வந்தவர்கள் விழுந்துவிட்டதா என அதிர்ச்சியுடன் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.