

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை சூர்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ்(43). இவர் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிடுவார். இவர்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவை தடை செய்ய வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும்தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.
இந்நிலையில் குன்னூருக்கு சென்ற இந்திய முப்படை தளபதி,ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர். இச்சம்பவத்தில் தீவிரவாத சதி இருக்கலாம் என சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் வெளியிட்டுள்ளார். இதனால் மதுரைகாவல் ஆணையர் பிரேமானந்த்சின்கா உத்தரவின்பேரில், அண்ணா நகர் காவல் உதவிஆணையர் சூரக்குமார், புதுார் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டிஉள்ளிட்ட போலீஸார் நேற்று காலை மாரிதாஸின் வீட்டுக்குச் சென்று, அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்து, பாஜகவினருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன், நிர்வாகி ஹரி உள்ளிட்டோர் மாரிதாஸ் வீட்டு முன் திரண்டனர். அவர்கள் மாரிதாஸை கைது செய்யக் கூடாது என போலீசுக்கு எதிராககோஷங்களை எழுப்பினர். இருப்பினும் போலீஸார் மாரிதாஸை புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மீதுபொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில்கூறும்போது, ‘‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீவிரவாத சதிஇருப்பதாகவும், மேலும் திமுக ஆட்சிக்கு எதிராகவும் சில கருத்துகளை நேற்று வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாலும் அவரைக் கைது செய்துள்ளோம். அவரை கைது செய்ய விடாமல் பாஜகவினர் தடுத்தனர். என்ன காரணத்துக்காக அவரை கைது செய்கிறோம் என சம்மன் வழங்கப்பட்டது’’ என்றார்.
பாஜக கண்டனம்
பாஜவினர் கூறுகையில், ‘‘மாரிதாஸ் தேசப்பற்றாளர், சமூக சேவகர் என்ற முறையில் அவரது வீட்டுக்குச் சென்று அவரது கைதுகுறித்து கண்டித்தோம். அவரை ஏன் கைது செய்கிறோம் எனமுதலில் காவல்துறை தெரிவிக்கவில்லை. அவரைப் பிடித்த பிறகேஅவர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர். இதைக் கண்டிகிறோம். நீதிமன்றத்தில் வழக்கை அவர் எதிர்கொள்ளத் தயாராக உள்ளார்’’ என்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ் மீது இபிகோ 153ஏ (கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, கருத்து தெரிவிப்பது), இபிகோ505 (2) (பொது மக்கள் மத்தியில்பதற்றம், குழப்பத்தை விளைவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில் கூறியது என்ன?
முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில்மாரிதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: முதுகுளத்தூர் அருகில் போலீஸார் தாக்கியதில் மாணவர்ஒருவர் உயிரிழந்தார். காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதால்தான் அவர் இறந்து இருக்கிறார்.
இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான குரல் ஏன்ஓங்கி ஒலிக்கவில்லை? சாத்தான்குளம் பிரச்சினையில் பொங்கி எழுந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தற்போது எங்கே போயின? இந்த விவகாரத்தில் பாஜகதான் முதலில் குரல் கொடுத்தது. இதன் பின்னரே பிற கட்சிகள் ஆங்காங்கே வாய் திறந்துள்ளனர்.
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை? பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு. இது மட்டுமின்றி பல பிரச்சினைகளுக்கு அவர் வாய் திறப்பதில்லை. மாணவர் பிரச்சினையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்க வேண்டும். தந்திரமாக நகரப் பார்க்கின்றனர். மணிகண்டனின் சகோதரர் அளித்த புகாரில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் என்றார்.