

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 16-வது வார்டில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலரான ஆர்.டி.அரசு போட்டியிட்டார். இதேபோல், அதிமுக சார்பில் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலரான யஷ்வந்த்ராவ் போட்டியிட்டார். இப்பதவிக்கான மறைமுகத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த ஆர்.டி.அரசு 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மறைமுகத் தேர்தலுக்கு முன்பாக திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மறைமுகத் தேர்தலன்று, தேர்தல் நடைபெற்ற இடத்துக்கே நேரடியாக அவர்கள் அழைத்து வரப்பட்டு வாக்களித்ததன் மூலம், ஆர்.டி.அரசு வெற்றி பெற்றார்.
ஆர்.டி. அரசு தனக்கு ஆதரவாக வாக்களிக்க ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, 22-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அஞ்சலை பாபு என்பவருக்கும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலரான அஞ்சலை பாபு, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-வது கவுன்சிலர் நூர்ஜகான்பாலு என்பவருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். இதில், “ஆர்.டி.அரசு, தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கூறி அதற்காக திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அனைவருக்கும் ரூ.3 லட்சம் வழங்கினார். எனக்கும் ரூ.3 லட்சம் வழங்கினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, பணம் குறைவாக உள்ளது; தங்களுக்கு நாளை தருகிறேன் எனக்கூறி, எனக்கு வழங்கிய பணத்தை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு வாக்களிக்க அழைத்துச் சென்றார்.
ஆனால், ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்ற பின்னரும் எனக்கு வழங்குவதாக தெரிவித்த பணத்தை வழங்க மறுக்கிறார். அதனால், ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றியக் குழு தலைவரிடம் பேசி பணத்தை பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். மறுத்தால், ஆட்சியரிடம் முறையிடுவேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆர்.டி.அரசு கூறும்போது, ``தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது மாதிரியான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. என் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக புகார் தெரிவித்துள்ளனர்'' என்றார்.