

தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் 10-வது நாளாக நாடு முழுவதும் நேற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதே போல், ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி 358 நகைக் கடை உரிமையாளர்கள் சங்கங்களும் கடந்த 2-ம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் 10-வது நாளாக நேற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தின. நாடு முழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் கடந்த 6, 7-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்று கடைகள் திறக்கப்பட்டன. பின்னர், 8-ம் தேதி முதல் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தால் சென்னையில் தி. நகர், பிராட்வே, புரசை வாக்கம் உள்ளிட்ட இடங் களில் நகைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதனிடையே, கலால் வரியை ரத்து செய்ய கோரி நகை கடை உரிமையாளர்கள் தி. நகர் உஸ்மான் சாலையில் நேற்று அரை நிர்வாண (சட்டையை கழற்றி) போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற 800-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், தி. நகர் பகுதியிலேயே அவசர கூட்டமும் நடத்தப்பட்டது.
சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொது செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘இதுவரை எங் களுக்கு 20 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு செல்ல வேண்டிய 10 சதவீத சுங்கவரி வருவாய், 1 சதவீத வாட் வரி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. வரும் 17-ம் தேதி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரை காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.