

டிவி பெட்டி சின்னம் கேட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன் றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு வில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு டிவி பெட்டி சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “டிவி பெட்டி சி்ன்னம் வேண்டும் என்று மனுதாரர் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தைத் தான் அணுகியிருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா விஷயங்களுக்கும் உயர் நீதிமன்றத்தை நாடக்கூடாது’’ என்றனர். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.