

திருச்செந்தூர்-பொள்ளாச்சி இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க மதுரை, சேலம் ரயில்வே கோட்டங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதை திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க கடந்த 6-ம் தேதி ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. ரயில் இயக்கப்படும் தேதியை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்க உள்ளது.
இந்த ரயிலை திருச்செந்தூர்-மேட்டுபாளையம் இடையே இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறியதாவது: மேட்டுபாளையம் வரை ரயிலை நீட்டிப்பு செய்தால் தென் மாவட்டங்களுக்கு காலை நேரத்தில் பொள்ளாச்சி, பழனி வழியாக நேரடி ரயில் சேவை கிடைக்கும்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மருதமலை முருகன் கோயில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில்,பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மேட்டுபாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில்களுக்கு சென்றுவர பக்தர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன் பெறுவார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் தென்மாவட்ட மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். பாலக்காடு கோட்டம் இந்த ரயிலையும் பாலக்காட்டுக்கு கொண்டு செல்வதில் குறியாக உள்ளது.
எனவே, மதுரைகோட்டம் பாலக்காடு கோட்டத்தின் பரிந்துரைக்கு உடன்படக்கூடாது. சேலம் கோட்டமும், மதுரை கோட்டமும் இணைந்து ஆக்கப்பூர்வமாக மேட்டுப்பாளையம் வரை திருச்செந்தூர்-பொள்ளாச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
இதேகோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளருக்கு பொள்ளாச்சி எம்.பி., கு.சண்முகசுந்தரம் கடிதம் எழுதியிருந்தார். திண்டுக்கல் எம்.பி. வேலுசாமியும் வலியுறுத்தி இருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டில் அகல பாதை மாற்றத்துக்கு பிறகு போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கூட இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.