Last Updated : 09 Dec, 2021 05:44 PM

 

Published : 09 Dec 2021 05:44 PM
Last Updated : 09 Dec 2021 05:44 PM

அரசின் இருமொழிக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் க.பொன்முடி பேச்சு

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அமைச்சர் க.பொன்முடி.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 37-வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி பேசியது:

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவது என்பது சாதாரண விசயமல்ல. முன்பெல்லாம் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை. மாணவர்கள் வருங்காலத்தை தீர்மானிக்கக் கூடியவர்கள். இப்போது எப்படி தயாராகிறீர்களோ அதைவைத்துத்தான் எதிர்காலம் அமையும்.

இன்றைய காலக் கட்டத்தில் வெறும் ஏட்டுக் கல்வி உதவாது. செயல்முறையுடன் கூடிய கல்விதான் முக்கியம். இந்தக் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு பேராசிரியர்கள் முதலில் பயிற்சி பெற வேண்டும். எனவேதான், பாடத் திட்டங்களை எல்லாம் செயல்முறையுடன் கூடியதாக மாற்றி அமைக்குமாறு அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கு ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இதன்மூலம் சங்க காலம் திரும்பிக் கொண்டிருப்பதை அறியலாம். சங்க காலத்தில் இரு பாலரிலும் புலவர்கள் இருந்த நிலையில், இடைக்காலத்தில் நேரிட்ட கலாச்சார படையெடுப்புகள் காரணமாக அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை உருவானது.

தங்கள் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக தாய்மார்கள் பல்வேறு வழிகளிலும் உழைக்கின்றனர். அந்தக் காலத்தில் இருந்த நிலை மாறி தற்போது கல்வி பெறுவதில் பெண்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். எனவேதான், அரசு கலைக் கல்லூரிகளில் பயில கட்டணமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு மாணவர்கள் உயர் கல்வி பயில்வதை அரசு பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருகிறது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தாண்டி தாங்கள் விரும்பும் எந்தவொரு 3-வது மொழியையும் மாணவர்கள் கற்கலாம். ஆனால், அது வலிய திணிக்கப்படக் கூடாது. இது எங்கள் கோரிக்கை. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறேன். இரு மொழிக் கொள்கையே எங்கள் முதல்வரின் விருப்பம்.

மாநிலங்களின் வளர்ச்சியைப் பொருத்துதான் நாட்டின் வளர்ச்சி அமையும். மாநிலங்களின் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் முக்கியம். எனவே, கல்வியுடன் பல்வேறு திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சமுதாய சூழ்நிலை, நமது வளர்ச்சிக்கு காரணமாணவர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். பட்டம் பெறும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துகள் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x