

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் இன்று (09.12.2021) வெளியிட்டார்.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30,23,803, பெண் வாக்காளர்கள் 30,93,355 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1,576 பேர் உள்ளனர்.
குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12) வார்டு-159இல் 3,116 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10) வார்டு-137இல் 58,620 வாக்காளர்களும் உள்ளனர்.
மேற்படி, வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா எனச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,284 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் (மண்டலம்-9) 622 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, மணலி மண்டலத்தில் (மண்டலம்-2) 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளர் விஷு மஹாஜன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்."
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.