

முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் மரணமடைந்ததை அடுத்து ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய தடயவியல் குழு குன்னூர் வருகை தந்துள்ளது.
நீலகிரியின் குன்னூர் மலைப்பகுதியில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக நேற்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இந்திய முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று காலை குன்னூர் வருகை தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வெலிங்டன் ராணுவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை ஹெலிகாப்டரின் 'கருப்புப் பெட்டி' என்று அறியப்படும் ஃப்ளைட் ரெக்கார்டரைப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
காரணங்களை ஆராயும் தடயவியல் துறை
விபத்துக் காரணங்களை ஆராய்வதற்காக தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர், குன்னூரில் உள்ள காட்டேரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்குச் சற்று முன் வந்தனர்.
முன்னதாக, இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் உடன் இருந்தார்.
ராணுவ மரியாதையுடன் நாளை அடக்கம்
இதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலை மார்க்கமாக இன்று சூலூர் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. விமான விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லியில் நாளை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.