Last Updated : 09 Dec, 2021 03:06 AM

 

Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

பழங்குடி மக்களின் குடிப் பெயர்ச்சி: துயரும் துயர் துடைப்பும்..

வரலாற்று ரீதியாக வன வாழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துடைத்து எறிவதும், நிலம், வாழ்வாதாரம், உணவு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் கொடுப்பதும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஆனால், பூர்வீக குடிகள் தாங்கள் குடியிருக்கும் வனப் பகுதியில் வாழ்வாதார வேலைகளை இழந்து தொடர்ந்து குடிபெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வேலை தேடி குடிபெயர்தல், பெரும்பாலும் குடும்பத்தோடேயே நடைபெறுகிறது. சில நேரங்களில், ஆண்கள் மட்டுமே தனியாக வேலை தேடிச் சென்று, குடும்பத்தைக் காப்பாற்றும் போக்கும் இருக்கிறது.‌ வேலை தேடி குடிபெயர்ந்து செல்பவர்களில் 560 பேர் குடும்பத்தோடும், 164 பேர் ஆண்கள் மட்டும் தனியாகவும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.

வேலை தேடி பழங்குடிகள் செல்லும் இடங்கள்

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் என வெளி மாநிலங்களுக்கும், வால்பாறை, கோத்தகிரி, தருமபுரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், ஈரோடு, காங்கேயம் என தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து வருகின்றனர்.

தேடிச் செல்லும் வேலைகள்

தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், தோட்டப் பயிர்கள் பராமரிப்பு, கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டுதல், கல் குவாரி, கட்டுமானப் பணிகள், ஜவுளி ஆலைகள், செங்கல் சூளை, வாழை மரம் வெட்டுதல், கனரக வாகனங்களில் டிரைவர் வேலை என பல வேலைகளுக்கு செல்கின்றனர். இதில் தேயிலை மற்றும் காபி தோட்ட வேலைகள் (248 பேர்), கரும்பு வெட்டுதல் (202 பேர்) ஆகியவை பிரதான வேலைகளாக உள்ளன. முன் பணம் பெற்றுக் கொண்டு, விடுமுறை ஏதுமின்றி, 3 வேலையும் அங்கேயே உண்டு, உறங்கி, கொத்தடிமைகள் போல வேலை செய்து வரும் 28 பேரும் இதில் அடக்கம்.

ஈரோடு மாவட்டத்தில் பழங்குடிகள் 115 வாழ்விடங்களில், ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவை குடிப் பெயர்ச்சி அதிகமாக இருக்கும் இடங்களாக பார்த்து தேர்வு செய்யப்பட்டது.

குடிப் பெயர்ச்சிக்கான காரணங்கள்

தொடர்ந்து குடி பெயர்ந்து வரும் 724 பேரில், மலைப் பகுதியில் வேலை கிடைக்காமல் வேலை தேடி குடி பெயர்ந்தோர் 566 பேர். இது, குடி பெயர்ந்து செல்வோர் எண்ணிக்கையில் 59%. மீதமுள்ள 158 பேர் (16.5%) கூடுதல் வருவாய் தேடி குடி பெயர்வதாக குறிப்பிட்டனர்.

குடிபெயர்தலின் கால அளவு

ஓர் ஆண்டில் 6 மாதங்கள் வரை குடும்பத்தோடு குடி பெயர்தல். 4 முதல் 6 மாதம் குடி பெயர்தல், 2 முதல் 3 மாதம் குடி பெயர்தல் என பல வகையாக இருக்கிறது. எப்போதெல்லாம் உள்ளூரில் வேலை கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் உண்டு. தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் வருடாவருடம் 6 மாதங்கள்குடும்பத்தோடு குடி பெயர்தல் நடைமுறையாக உள்ளது. 70% பழங்குடிகளுக்கு ஏதோ கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் சாகுபடி செய்யும் காலங்கள் தவிர்த்து இதர காலங்களில் குடி பெயர்ந்து செல்கின்றனர்.

குடிப் பெயர்ச்சியின் விளைவுகள்

1. வேலையில்லாத காலங்களில் வேலையைத் தேடிக் கொள்ளவும், குறைந்த வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளவும், வேலை இல்லாத காலங்களில் ஏற்பட்ட கடனைக் குறைக்கவும், சாகுபடி கால இழப்புகளை ஈடு செய்யவும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2. குழந்தைகளின் கல்வி பாதிப்பு: மலைப் பகுதிகளில் கல்வித் தரம் பல்வேறு காரணங்களால் மிகவும் குறைவாகவே உள்ளது. எண்ணும் எழுத்தும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் மிகவும் காலதாமதமாகவே கிடைக்கிறது. இந்த நிலையில், வருடத்தில் 6 மாதங்கள் குடி பெயர்தல் பழங்குடி குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதிக்கிறது. முதல் 6 மாதங்களில் கற்றதை அடுத்த 6 மாதங்களில் முற்றாகமறந்து விடுகிறார்கள்.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்து வீட்டில் இருக்கும் முதியவர்களோடு தங்கிக் கொள்ளும் பக்குவம் வரும் வரை அம்மா அப்பாவோடு குடி பெயர்ந்து சென்று விடுகின்றனர். ஆறாம் வகுப்பு வரும்போது தான் தொடர்ச்சியாக பள்ளி செல்ல முடிகிறது. எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இருந்தாலும் அதற்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமல், ஒன்பது, பத்து வகுப்புகளில் தோல்வியைத் தழுவி, பழங்குடிகளின் இயல்பான வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.

பழங்குடிகளின் குடிப் பெயர்ச்சியும் குழந்தைகளின் கல்வித் தரமும் ஒன்றோடொன்று கலந்தது. குடிப் பெயர்ச்சியை கட்டுப்படுத்தி உள்ளூரில் வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் பழங்குடி குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் என்பது சாத்தியமில்லை.

3. பழங்குடிகள் ஒரு கூட்டு வாழ்க்கை மற்றும் கூட்டு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு பழக்கப்பட்டவர்கள். இதனை அவர்கள் குடி பெயர்ந்து வாழும் காலத்தில் அனுபவிக்க இயலாமல் போகிறது என்பதோடு, மாற்றுப் பண்பாட்டு நடைமுறைகளுக்கு ஆட்படவும் வாய்ப்பு இருக்கிறது. இது, மலை மக்களின் இயற்கையோடு இயைந்த பண்பாட்டு வாழ்க்கைக்கு எதிராகச் செல்லவும் வாய்ப்பு அளிக்கிறது.

4. கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அவர்கள் தங்கள் உறவின் முறைகளை பிரிந்து வாழ்தல், உடனடியாக திரும்பி வர எத்தனித்தல் ஆகியவை மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. கரோனா பெருந் தொற்று காலத்தில் ஆந்திராவுக்கு ஆட்களை அழைத்துச் சென்றவர் மீண்டும் ஊர் திரும்ப ரூ.20 ஆயிரம் வரை செலவழித்தார். இந்தக் கடனை அடைக்கவே அவருக்கு வெகு காலம் ஆகும்.

குடிப் பெயர்ச்சியை தடுக்கும் வழிமுறைகள்

1. ஆண்டாண்டு காலமாக தாங்கள் விவசாயம் செய்து வரும், ஆனால் அரசாங்கத்தால் வருவாய் புறம்போக்கு என்று கூறப்படும் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.

2. சிறு வனப் பொருட்களை முழுமையாக சேகரிக்கவும் விற்கவும், சிறு வனப் பொருட்கள் மகசூலை அதிகரிக்க செய்யவும் வழி வகைகள் செய்யப்பட வேண்டும்.

3. பொதுத் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் போதுமான கடன் வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

கட்டுரையாளர்:

பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. இந்திய அரசின் ICSSR நிதி நல்கை பெற்ற ஆய்வாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x