

‘பழம் நஞ்சு கலந்த பாலில் விழக் கூடாது’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களின் தொடக்க நிகழ்ச்சி சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் நலக் கூட்டணிக்கான மின்னஞ்சல், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய பக்கங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணி 3 கட்ட பிரச்சார பயணங்களை முடித் துள்ளது. நாங்கள் செல்கிற இடங் களில் எல்லாம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆதரவளித்து வரு கின்றனர். தமிழகத்தில் கட்சி சாராத 65 சதவீதம் பேரின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். சமூகம், அரசியல், பொருளாதாரம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கும் போக்கு கடந்த 2 ஆண்டுகளில் அதி கரித்துள்ளது. இதை உணர்ந்தே ம.ந.கூட்டணியின் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கியுள்ளோம்.
தேமுதிக, தமாகா தலைவர் களுடன் கூட்டணி குறித்து பேசியுள் ளோம். அவர்கள் இன்னும் முடிவை கூறவில்லை. தேமுதிக கூட்டணி பற்றிய கேள்விக்கு ‘பழம் கனிந்து விட்டது. பாலில் விழுவதற்காக காத்திருக்கிறோம்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கனிந்த பழம் ஊழல் நஞ்சு கலந்த பாலில் விழக்கூடாது. தூய்மையான பாலில்தான் விழ வேண்டும். ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் அதை வெளியிடுவோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.
யாருடனும் கூட்டணி பற்றி பேச வில்லை என்று தேமுதிக அறிவித் துள்ளதே என்று கேட்டபோது, ‘‘நாங்கள் வெளிப்படையாகத்தான் கூட்டணி அழைப்பு விடுத்தோம். திமுக கூட்டணி தொடர்பான வதந்திகளைதான் தேமுதிக மறுத்துள்ளது’’ என்று வைகோ கூறினார்.