

பிரதமர் நரேந்திர மோடிக்கு,முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று எழுதிய கடிதத்தில்கூறியிருப்பதாவது:
கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத்தில், திருத்தம் செய்யப்படுவதால் மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) பாதிக்கப்படும். இந்த சட்டத் திருத்த மசோதாவானது, மின் விநியோக பிரிவின் உரிமங்களை ரத்து செய்ய வழிவகை செய்வதாக தெரிகிறது.
இந்த மசோதா மூலம், வர்த்தக பகுதிகளில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, புதிய தனியார் நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் நிலையும் ஏற்படும். இதனால், சமூக சிந்தனையின்றி லாபநோக்கத்தையே குறிக்கோளாக கொண்டு அதற்கேற்ப முறைகளை வகுக்கும் உரிமையை தனியார் நிறுவனங்கள் பெறும். மேலும், மாநிலத்தின் பொதுத்துறை மின்சாரத்தை பெறும் நுகர்வோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே மானியம் பெறும் நிலை ஏற்படும்.
மின்சார திருத்தச்சட்டத்தின் 26, 28, 32 ஆகியபிரிவுகளை திருத்துவதன் மூலம், பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படுகிறது. இது, மாநில மின் தொடரமைப்புக் கழகத்தின் எஸ்எல்டிசி மையம், மின் விநியோக நிறுவனங்கள் அல்லது மாநில அரசின் மின்சாரம்தொடர்பான செயல்பாடுகளை மறைமுகமாக கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும்.
எனவே, மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை மாநில அரசுக்குச்சொந்தமான விநியோகஸ்தர் களை கொண்டு வழங்கும் நிலை தொடர அனுமதிக்கும் வகையில், இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.