

புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வாதானூர் பேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலய்யா. கூலித்தொழி லாளி. நேற்று மாலை பால் சொசைட்டிக்கு சென்ற பாலய்யா, பால் ஊற்றிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாதானூர் வழியாக பி.எஸ் பாளையம் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று பாலய்யா மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் லாரியில் இருந்து குதித்து தப்பிச் ஓடியோடி விட்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாலய்யாவின் மனைவி முத்துலட்சுமி (50), கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து, மயக்கமடைந்து சாலையில் விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முத்துலட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.