

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பெயர்களைக் கூறிய 7 வயது சிறுமி கி.பிரித்தியை தேர்தல் தூதுவராக செய்யாறு சார் ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ‘வாக்களிக்க வாருங்கள்’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.
சார் ஆட்சியரும், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபு சங்கர் தலைமை வகித்தார். தேர்தல் குறித்த தகவல்களை வீடியோ படக் காட்சி மூலம் கல்லூரியின் முன்னாள் மாணவர் கீர்த்திராஜ் விளக்கினார். 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்ததற்காக, கல்லூரி நிர்வாகத்துக்கு சார் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அவர், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட 90 வயதுக்கு மேற்பட்ட 7 மூத்த வாக்காளர்களை வரவழைத்து கவுரவித்தார். இந்த கூட்டத்தில், வந்தவாசி அடுத்த விளாநல்லூர் கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி பிரித்தி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை மாவட்ட வாரியாக பட்டியலிட்டு எடுத்துரைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதனால், அந்த சிறுமிக்கு ரூ.2,100 பணமுடிப்பு வழங்கி ‘தேர்தல் தூதுவராக’ சார் ஆட்சியர் அறிவித்தார்.