

சென்னையில் 7 வழித் தடங்களில் 96.7 கி.மீ தூரத்துக்கு துரித பேருந்து சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) கொண்டு வர விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னையில் முக்கியமான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்ல வேண்டியிருப்பதால் எரிபொருள் செலவு அதிகமாகி வருகிறது. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள்கூட வழி கிடைக்காமல் தவிப்பது அன்றாட நிகழ்வாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தனியார் வாகன பயன்பாட்டை குறைக்கவும், விரைவாக பயணம் செய்யவும் மாநகர பஸ்களை தனிப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி துரித பஸ் சேவை திட்டத்தை (பிஆர்டிஎஸ்) கொண்டு வர பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் 7 வழித் தடங்களில் மொத்தம் 96.7 கி.மீ தூரத்துக்கு துரித பஸ் சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) கொண்டுவரப்படவுள்ளது. கோயம்பேடு பூந்தமல்லி (12.4 கி.மீ), கோயம்பேடு அம்பத்தூர் (7.7 கி.மீ), கோயம்பேடு மாதவரம் (12.4 கி.மீ), சைதாப் பேட்டை சிறுசேரி (24.8 கி.மீ), சைதாப்பேட்டை தாம்பரம் (18.2 கீ.மீ) (மகேந்திரா சிட்டி வரையில் விரிவாக்க வாய்ப்பு), கோயம்பேடு சைதாப்பேட்டை (9 கி.மீ), துரைப்பாக்கம் கோயம்பேடு (10.6 கி.மீ) ஆகிய வழித் தடங்களில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் மதிப்பு ரூ.4 கோடியே 50 லட்சமாகும். டெண்டருக்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங் களை சமர்ப்பிக்க வரும் 29-ம் தேதி கடைசியாகும். வரும் 30-ம் தேதி டெண்டர் திறக்கப்படும்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மாநகர பஸ்களுடன், தனியார் வாகனங்களும் செல்வதால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவாக செல்லவும் மாநகர பஸ்களுக்கென்று தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தனிப்பாதையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பஸகள் இயக்கப்படும்.
தனிப்பாதைகளில் பஸ்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போதுள்ளதைக் காட்டிலும் 50 சதவீத நேரம் மிச்சமாகும். விபத்துகள் குறையும். அரசு பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.