

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கு கிறது. மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.82 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 4,000 பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 பொதுத் தேர்வு 4-ம் தேதி (இன்று) தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்கள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகள் என 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதுதவிர, தனித் தேர்வர்களாக 42 ஆயிரத்து 347 பேர் எழுதுகின்றனர்.
சென்னையில் 410 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 91 பேர், 145 மையங்களில் தேர்வு எழுத உள் ளனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 617 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 474 பேர். புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில் 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை புழல் சிறை, பாளையங்கோட்டை, திருச்சி சிறைகளில் 106 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு தமிழ்வழியில் பயின்று தேர்வு எழுதுபவர்கள் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர். இவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வசதிகள்
1,867 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். அவர் களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்படும். அவர்களுக்கு தரை தளத்திலேயே தேர்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சொல்வதை கேட்டு வேறொருவர் எழுதும் வசதி 827 மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 611 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு முதல்முறையாக தேர்வுக் கூட அனுமதிச்சீட்டில் தேர்வர் களுக்கான அறிவுரைகள் அச்சிடப் பட்டுள்ளன. இதனால், வினாத்தாள், விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை மாணவர்கள் முன்னதாகவே படித்து அறிந்துகொள்ளலாம்.
தேர்வு ஏற்பாடுகள் தயார்
அனைத்து தேர்வு மையங்களுக் கும் தேவையான முதன்மை விடைத் தாள்கள், கூடுதல் விடைத் தாள்கள், முகப்பு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது மாணவர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங் கள் அச்சிடப்பட்ட முகப்பு சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டு வழங்கப் படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையெழுத்து போட் டால் போதும்.
அனைத்து மாவட்டங்களிலும் வழித்தடங்கள் இறுதிசெய்யப் பட்டுள்ளன. தேர்வு நாட்களில் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகளை காப்பு மையங்களில் இருந்து பாதுகாப் பாக தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கவும், தேர்வு முடிந்தவுடன் அனைத்து தேர்வு மையங்களில் இருந்தும் விடைத்தாள் கட்டுக்களை விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடையின்றி மின்சாரம்
வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச் சம் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையற்ற மின் சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆட்சியர் தலைமையில் குழு
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவர். தேர்வுக் குழுவினர் தேர்வு மையங்களில் திடீர் மேற்பார்வையிட்டு, முறை கேடுகள், ஒழுங்கீன செயல்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பார்கள். பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர் கள், துணை இயக்குநர் களும் மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக் கால பணிகளை கண்காணிப்பர்.
4 ஆயிரம் பறக்கும் படை
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோரும் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடுகள் நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
செல்போனுக்கு தடை
இந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டுவர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடன் கண்டிப்பாக செல்போனை எடுத்துவரக் கூடாது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி தேர்வு அறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தேர்வின்போது, மாணவர்கள் துண்டுத்தாள் (பிட்) வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து காப்பி அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அது கடுங்குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்யவும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.