Published : 08 Dec 2021 05:35 PM
Last Updated : 08 Dec 2021 05:35 PM

விவசாயம், கல்வி, மருத்துவத் துறைகளுக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: வேல்முருகன்

கோப்புப் படம்

சென்னை

தமிழகத்தில் விவசாயம், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்குப் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"விவசாயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, வேளாண் துறைக்கென்று முதன் முறையாக தனி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த அனைத்து அம்சங்களும் வரவேற்கத்தக்கதாக இருந்தன.

இவை ஒருபுறம் இருக்க, பொதுவாக மழைக்காலங்களில் விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சமீபத்திய நிகழ்வுகளைச் சான்றாக எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசு, அறுவடைக்குத் தயாராக இருந்து சேதம் அடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணமும், சம்பா பருவத்தில் சாகுபடி செய்து மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான நிவாரணத் தொகை இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நகை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள், மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், கடந்த காலங்களில் வீசிய கஜா, வர்தா உள்ளிட்ட பல்வேறு புயல்களால், விவசாயிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அப்புயல் பாதிப்புகளுக்குப் பின்னர், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு, தொழிற்சாலை தொழிலாளர்களாகவும், கூலி விவசாயிகளாகவும் மாறியுள்ளனர். சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்பனை செய்துவிட்டு, நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இச்சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கிராமப்புறப் பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் நிலத்தைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றைத் தனியார் கல்வி நிலையம், கட்டுமானம் போன்ற பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில், விவசாயப் பணியின் தொடக்கம் முதல் அவ்விளைபொருட்களைச் சந்தைப்படுத்தும் வரை, தமிழக அரசு இன்னும் பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மழைக் காலங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணத் தொகையை வழங்க முன்வர வேண்டும். இதற்காக, வேளாண்துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அம்முதலீட்டைப் பெற மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கல்வி

கரோனா முடக்கத்திற்குப் பின்னர், அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கரோனா ஊரடங்கால், அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. இது குழந்தைகளின் கல்வியில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைத்த நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோர் பலர் அரசுப் பள்ளிகளைத் தேடி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரத்தில் இந்தத் தருணத்தில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, கல்வித்துறையின் முதலீட்டை அதிகரித்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வகுப்பறைகளைக் கட்ட வேண்டும். நாற்காலி, இருக்கை, தூய்மையான கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டுத் திடல், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பலவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை முழு நேரமாக நியமிக்க வேண்டும்.

மருத்துவம்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பணி என்பது மகத்தானது. அதோடு, சமீபத்திய மழைக்காலங்களில் நோய்த் தடுப்புப் பணிகளிலும் அவர்களின் சேவை போற்றத்தக்க வகையில் இருந்தது. ஆனால், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களில் பெரும்பாலோனோர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.

எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாகத் தரமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மருத்துவத்துறையில் முதலீட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது."

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x