Published : 08 Dec 2021 04:05 PM
Last Updated : 08 Dec 2021 04:05 PM

நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்: மத்திய அமைச்சரிடம் விளக்கம்

நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் தமிழ்நாடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நூல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கினர்.

அந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"கடந்த இரண்டு மாதங்களாக கட்டுப்பாடு இல்லாமலும், எதிர்பாராமலும் நடந்த நூல் விலை ஏற்றத்தின் காரணமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விசைத்தறியாளர்களும் செய்வதறியாது முடங்கிப்போய் இருக்கின்றார்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்பந்தம் செய்த ஆயத்த ஆடை மற்றும் இதர ஜவுளி பொருட்களை தயாரிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மேலும் தொழிலை எப்படி தொடர்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லாத ஏற்றுமதியும் உள்நாட்டு தேவைகளை கவனத்தில் கொள்ளாமல் அனுமதிக்கப்படும் ஏற்றுமதியும் நூல் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட நூற்பாலைகளால் நூல் உற்பத்தி குறைந்ததும் இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

பல வெளிநாடுகள் அவர்களின் ஆயத்த ஆடை தேவைகளுக்காக இந்தியாவை நோக்கி வரும்போது அதை ஒப்புக்கொண்டு செய்வதற்கான நம்பிக்கை ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றவர்களிடத்தில் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். மத்திய அரசு தாமதப்படுத்தாமல் இதற்கான தீர்வை கண்டு ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் உடனடியாக அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகளையும், அதிகாரிகளையும் அழைத்து பேசி நாட்டின் வளர்ச்சியையும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தமிழக முதல்வரும் நூல் விலை ஏற்றம் சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றார். இந்த நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்."

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x