

தங்களின் பள்ளி ஆசிரியரின் வீட்டு திருமண நிகழ்வில் மேடை அலங்காரத்தை வாழை இலை, மந்தார இலை, தென்னை ஓலை கொண்டு அரசு பள்ளி மாணவர்கள் செய்த அலங்காரம் வரவேற்பு பெற்றுள்ளது.
புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களிலிருந்து விழுந்து குப்பையில் சேரும் பொருட்களை கலைப்படைகளாக மாற்றுவதில் வல்லமை படைத்த மாணவர்களை பல ஆண்டுகளாக உருவாக்கியுள்ளார். குறிப்பாக பாய்மரக்கப்பல், சைக்கிள், விலங்குகள், நகைகள் என செய்து வந்தனர். பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணத்துக்கு இலைகளால் செய்த மேடை அலங்காரம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், "கலைப்படைப்புகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு திருமணம், கருத்தரங்கம் நிகழ்வுகளில் இயற்கை பொருட்கள் கொண்டு விடுமுறை நாட்களில் மேடை அலங்காரமும் செய்ய பயிற்சி தருகிறோம். எங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிகழ்வில் நாங்கள் அலங்கார மேடை அமைத்தோம். அந்த மேடையை வாழை இலை, தென்னை ஓலை, மந்தார இலை கொண்டு வடிவமைத்தோம். எங்கள் பள்ளியில் 7, 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்தோம்.
இந்த திருமண நிச்சயதார்த்த மேடை அதிகம் வரவேற்பு பெற்றது. அதை பாராட்டி குழந்தைகளுக்கு புத்தகப்பையை மணமக்கள் வாங்கி தந்தனர்" என்று குறிப்பிட்டார்.