யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை; என் பெயரில் கேட்டாலும் தரக்கூடாது: விழிப்புணர்வு போர்டு வைத்த காவல் ஆய்வாளர்

யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை; என் பெயரில் கேட்டாலும் தரக்கூடாது: விழிப்புணர்வு போர்டு வைத்த காவல் ஆய்வாளர்
Updated on
1 min read

யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை, என் பெயரை சொல்லி கேட்டாலும் தர வேண்டாம் போன்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்து, மதுரை யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் ஆனந்த தாண்டவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சரவணன் என்பவர் ஆய்வாளராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டு, பணியில் உள்ளார்.

இந்நிலையில், அவரது காவல் நிலையத்திற்கு வெளியில் போர்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘‘ யா.ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பி. சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதில்லை.

என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்கவேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பில்லை என, தெரிவிக்கிறேன்,’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் போடப் பட்டுள்ள வித்தியாசமான இந்த விழிப்புணர்வு போர்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மத்தியிலும் பேசப்படுகிறது.

இதுகுறித்து மதுரை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறும்போது, ”காவல் நிலையங்களில் லஞ்சம் ஒழிப்பு பலகையை வைக்க லட்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் தனது பெயரை குறிப்பிட்டு வைத்திருக்கிறார். இதில் தவறு இல்லை. நேர்மறையான செயல்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in