Published : 08 Dec 2021 12:13 PM
Last Updated : 08 Dec 2021 12:13 PM

'ஸ்மார்ட் சிட்டி’யில் ரூ.167 கோடியில் கட்டிய பெரியார் பேருந்து நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை

மதுரையில் ரூ.167 கோடியில் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று புதன்கிழமை காலை காணொலி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.167 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை, கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சியுடன் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மதுரைக்கு வந்து திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தற்போது கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம் பூமி பூஜை தள்ளிப் போகிறது. அதனால், ஸ்டாலின் தற்போது மதுரை வருவதற்கான பயணத் திட்டம் இல்லை. அதற்காகப் பேருந்து நிலையம் திறப்பு விழாவைத் தள்ளிவைக்க முடியாது.

தற்போது மழைக்காலம் என்பதால் மழைக்கு ஒதுங்கக்கூட முடியாமல் மக்கள், சாலையில் மழையில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறும் பரிதாபம் தொடர்கிறது. மாநகர டவுன் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வர முடியாமல் சாலையோரங்களில் நிற்பதால் பொதுமக்கள் மாநகரப் பேருந்துப் பயணத்திற்காக பெரும் சிரமம் அடைகின்றனர். அதனால், உடனடியாகப் பேருந்து நிலையத்தைத் திறக்க வேண்டிய நெருக்கடிக்கு மாநகராட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பேருந்து நிலையத்தைக் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே இன்று காலை திறந்து வைத்தார். மதுரையில் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், முதன்மைப் பொறியாளர் அரசு மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு பெரியார் பேருந்து நிலையம் நேற்று இரவு முதல் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இரவில் பேருந்து நிலையத்தைப் பார்ப்பதற்கு ரம்மியமாகக் காணப்பட்டது. தற்போது புதிய பெரியார் பேருந்து நிலையத் திறப்பை முன்னிட்டு, பேருந்துப் போக்குவரத்து பெரியார் நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தப் பேருந்து நிலையம் போதுமான பேருந்துகள் நிறுத்தும் அளவிற்குக் கட்டப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருந்தது. தற்போதுதான் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருப்பதால் ஓரிரு நாளில் பெரியார் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் பற்றிய பிரச்சினைகள் முழுமையாகத் தெரியவரும். பேருந்து நிலையம் திறந்தவுடனே பெரியார் நிலையம் பகுதியில் நெரிசல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

பேருந்து நிலையத்தில் 40 சதவீதம் இடத்தில் மாநகராட்சி வணிக நோக்கில் வணிக வளாகம் அமைத்துள்ளது. இந்த வணிக வளாகம் கட்டுமானப் பணி இன்னும் முடியவில்லை. இந்த வணிக வளாகம் திறக்கப்படும்போது அங்கு வரும் வாகனங்கள், வாடிக்கையாளர்களும் வாகனங்கள் வரும்போது பேருந்து நிலையம் வளாகம் மட்டுமில்லாது பேருந்து நிலையத்திற்கு வெளியேயும் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே பெரியார் பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகள் வந்து செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுவதாலே இந்தப் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அந்த நோக்கமே நிறைவடையாமல் வணிகப் பேருந்து நிலையமாகக் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தால் ஏற்படும் நெரிசலை மாநகராட்சியும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது தெரியவில்லை.

அழகோவியமான பேருந்து நிலையச் சுவர்கள்

பொதுவாக, சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்புவதுமாகப் பேருந்து நிலையச் சுவர்களைப் பயணிகள் அசுத்தம் செய்வார்கள். அதனால், பேருந்து நிலையமே நோய் பரப்பும் இடமாக மாறிவிடும். இந்தச் சூழலைத் தவிர்க்க மதுரை மாநகராட்சி மதுரையின் பழமையையும், அதன் பராம்பரியத்தையும் போற்றும் வகையிலும் அதனை அடையாளப்படுத்தும் வகையிலும் பேருந்து நிலையச் சுற்றுச் சுவர்களில் பயணிகளைக் கவரும் வசீரகமான அழகோவியங்களை மாநகராட்சி ஒவியர்களை வைத்து வரைந்துள்ளது. அதனால், தற்போது ஓவியங்கள் வரைந்த பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x