Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

சாதி வேறுபாடுகளைக் களைந்து அனைத்து கிராமங்களிலும் பொது மயானம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சாதி வேறுபாடுகளைக் களைந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர்கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் கோகுல கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர்கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் இறந்த நபர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வருகின்றனர். அந்த ஓடை புறம்போக்குக்கு அருகில் எங்களுடைய நிலம் இருப்பதால், அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரி்த்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உலகம் முழுவதும் உள்ள தத்துவஞானிகள், கவிஞர்கள் அனைவரும், மனிதகுலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் உலாவுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இறந்த நபர்களின் உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய பொது மயானம் இல்லாத சூழல் இருப்பது வேதனையளிக்கிறது.

காலம், காலமாக பட்டியலினவகுப்பைச் சேர்ந்த அருந்ததியினருக்கு உடலை அடக்கம் செய்யபோதிய மயானம் இருப்பதில்லை. அவர்கள் இறந்தால் அவர்களி்ன் உடலைக் கூட தங்களது நிலம் வழியாகவோ அல்லது பாதை வழியாகவோ எடுத்துச் செல்லக்கூடாது என்ற சாதீய கொடுமை இன்னும் உள்ளது. சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை தமிழக அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான பொது மயானங்களை உருவாக்க வேண்டும். இந்த உரிமை அனைத்து சாதியினருக்கும் உள்ளது. அதை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும்’’என உத்தரவிட்டுள்ளார்.

ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

பொது மயானம் உள்ள கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். சாதி, மத சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை உள்ளிட்டவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே மாணவர்களி்ன் மனதில் பதிய வைக்க, அவற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும். இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளபடி மடூர் கிராமத்தில் சாதி பாகுபாடின்றி பொது மயானம் அமைக்க உரியஇடத்தை அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதி ஆர்.மகாதேவன் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x